இந்தியர்களில், ஈழப்பிரச்சனையில் தமிழர்கள் சார்பான இந்திய ஈடுபாட்டை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும் சாக்கு, காஷ்மீரே.
அவர்களது வாதமாவது, ஈழப்பிரச்சினையில் நாம்(இந்தியா) தலையிட்டால், காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் தலையீட்டை நாமே நியாயப்படுத்துவது போல் ஆகி விடும் என்பதே.
சென்ற வாரம் CNN தொலைக்காட்சியில் நடந்த வைகோ-வின் பேட்டியிலும் இதே கேள்வி கேட்கப்பட்டது.
இரு பிரச்சனைகளை குறித்தும் தெளிவாக தெரியாமல் இருப்பவர்களது வாதமே இப்படி அமையும்.
இக்கட்டுரையில் இவ்விரு பிரச்சனைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்துள்ளேன். இது குறித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
1. இலங்கையின் விடுதலைப்போராட்டத்தின் மூல காரணம் தமிழர்களை சிங்கள அரசு அடக்கி ஆண்டதேதான். காஷ்மீர் மக்கள் மீது இந்திய அரசு எந்த அடக்குமுறையும் கையாண்டது இல்லை அங்கு உள்ள போராட்டத்தின் மூல காரணம் பாகிஸ்தான் மட்டுமே என்பது உலகறிந்தது.
2. இலங்கை விடுதலைப்போராட்டம் 1956-ல் அற வழியில் தொடங்கி, இருபத்திரண்டு காலம் அற வழியிலேயே சென்று, பல்லாயிரம் மக்கள் பலியான பிறகு, 1978-லேதான் ஆயுதப்போராட்டமாக மாறியது. காஷ்மீர பிரச்சினை துவங்கியதே பாகிஸ்தானின் படையெடுப்பால்தான் என்பதும் எல்லாரும் அறிந்தது.
3. இலங்கைப்படை மிகப்பழமை வாய்ந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்து கோயில்கள் பலவற்றை குண்டு வைத்து தகர்த்துள்னர். இது அரசுப்படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போர் நடக்காத இடங்களில் நடந்த செயல். எல்லாவற்றிலும் முக்கியமானது யாழ் தமிழ் நூலக எரிப்பு. தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் அழிப்பதன் மூலம் அவர்களை வென்றுவிடலாம் என்ற குறுகிய புத்தி. இவைஏதோ கூலிப்படையோ கொள்ளைக்காரர்களோ செய்தது அல்ல இலங்கை இராணுவமே செய்தது. இவர்கள் போர்க்காலத்தில் போராளிகளை தாக்குகிறார்களோ இல்லையோ, இந்து/கிருஸ்துவ கோவில்களில் மறக்காமல் குண்டு போட்டு விடுவர். இந்தியப்படை இத்தகைய காரியம் ஏதும் காஷ்மீரில் செய்ததில்லை.
4. 1956-ல் இலங்கை அரசு, மத்திய இலங்கையை சேர்ந்த 10 லட்சம் தமிழர்களின் குடியுரிமையை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. காரணம் அவர்கள் ஆங்கிலேயரால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களாம். இரு நூற்றாண்டு காலமாக அங்கு இருப்பவர்கள் அவர்கள். கிழக்கு/வடக்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் பூர்வகுடிகள் என்பதனால் தப்பித்தனர். குடியுரிமை பறிப்பு காஷ்மீரில் நடந்ததில்லை. இப்படி ஒரு பாரிய குடியுரிமை பறிப்பு உலகிலேயே எங்கும் நடந்திருக்காது.
5. காஷ்மீரில் உள்ள ஆயுத போராட்டக்குழுவில் உள்ளவர் சில நூறே அதிலும் மெரும்பாண்மை பாகிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள், ISI-ன் கட்டுப்பாட்டில் உள்ளவை. தமிழீழ போராளிகள் இருபது ஆயிரத்துக்கும் மேல், அனைவரும் இலங்கை தமிழர்கள், தம் விடுதலைக்காக தாமே தன்னிச்சையாக செயல்படுபவர்கள்.
6. 1958, 1961, 1974 , 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கூலிப்படை கொண்டு இராணுவ/காவல்படையின் உதவியுடன் கொன்று குவித்து இனத்துடைப்பு செய்தது சிங்கள அரசு. இதில் தமிழர் ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது 1978-ல் தான் (முதல் நான்கு இனப்படுகொலைக்குப்பிறகு) என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 1983-ம் வருட இனப்படுகொலைக்குப்பின் விடுதலைப்போராட்டம் மக்களின் வலிய ஆதரவு பெற்றது. காஷ்மீரில் அப்படி எதுவும் நடைபெற்றதில்லை.
7. இலங்கையில் தமிழர் ஒருவர் அரசாங்க வேலை வாங்க கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்திய அரசாங்க வேலை வாங்க இந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டியதில்லை
8. காஷ்மீரில் அம்மக்களின் நில உரிமை பாதுகாக்கப்படுகிறது இந்தியர்கள் யாரும் அங்கே நிலம் வாங்க முடியாது. அப்படி ஒரு சிறப்புரிமை அவர்களுக்கு, இலங்கையிலோ இதற்கு மாறாக தமிழர்களின் நிலத்தை அபகரித்து சிங்களர்களுக்கு ஒப்படைத்தது இலங்கை அரசு.
9. இலங்கை அரசியல் அமைப்பு(constitution)ப்படியே தமிழர்கள் யாரும் இராணுவத்தில் சேர்க்கப்படக்கூடாது. மாறாக இந்தியப்படையில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் பெருவாரியாக உள்ளனர்.
10. காஷ்மீர் மக்களின் எந்த தொழிலையும் இந்திய அரசு தடை செய்ததில்லை. யாழ்ப்பானத்தில போர் உண்டோ இல்லையோ தமிழர்களுக்கு மீன் பிடிக்க தடையுண்டு. இலங்கையில் மீன் தேவையில் 60 விழுக்காட்டை பூர்த்தி செய்து வந்தவர்கள் தற்போது பெரும்பாலும் புலம்பெயர்ந்தோ அல்லது வேறு தொழிலோ செய்து வாழ்கின்றனர்.
11. எப்போதும் இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் உள்ள சாலை தொடர்பு தடைப்பட்டதேயில்லை. இலங்கையிலோ இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கும் ஒவ்வொரு முறையும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு சாலையை மூடி, அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை சேரவிடாமல் செய்து, தமிழர்களை பட்டினி போட்டு தங்கள் சினத்தினை தணிக்கின்றனர்.
12. காஷ்மீரில் வருடத்துக்கு ஓரிருவர், இராணுவத்தால் தீவிரவாதி என்று தவறாக எண்ணப்பட்டு சுடப்படுவதுண்டு. உலகமே இதை கண்டிக்கிறது. ஆனால் யாழில் மட்டும் மாதம் நூறு பேர் துணை இராணுவத்தால் கடத்தி சுடப்படுகின்றனர். தட்டிக்கேட்பார் யாரும் இல்லை. காசா பணமா?
பெரும்பாலான கருத்துக்கள் நான் ஊடகங்கள் மூலமாகவும், என் இலங்கை நண்பர்கள் மூலமாகவும் அறிந்தது.
நண்பர்களே நான் குறிப்பிடத்தவறிய வேறுபாடுகளை சொல்லிக்கொடுத்து உதவவும். சொன்னதில் பிழை இருப்பின் திருத்தவும்.
2 comments:
வரவேற்கதக்க பதிவு. பதிவுக்கு நன்றி.
வருகைக்கும் தருகைக்கும் நன்றி சாந்த குமார்
Post a Comment